பேசன் கீ லட்டு
தேவையான பொருட்கள்:
லட்டு செய்யவதற்காக சற்று கொரகொரப்பாக அரைக்கப்பட்ட கடலைமாவு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 7
பாதாம் - 5.
உலர்ந்த திராட்சை - 10
செய்முறை:
சாதாரண நைஸ் கடலைமாவு பயன்படுத்தி உருண்டை செய்பவர்கள், சாதாரண கடலை மாவு ஒன்றரை கப்பும் அதனுடன் அரை கப் ரவையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் வாணலியில் அல்லது கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் பாதாமை நறுக்கி போட்டு திராட்சை சேர்த்து வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் கடலை மாவை கொட்டி மேலும் சிறிது நெய் விட்டு நன்றாக வாசனை வரும் வரை கட்டியில்லாமல் வறுக்கவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையென்றால் மாவு கருகிவிடும் சுமார் 10 முதல் 15 நிமிடம் வரை வறுத்து, இதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து வைக்கவும்.
இந்த கலவையில் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் மீதமுள்ள நெய்யை (கெட்டியாக இருந்தால் உருக்கி ஊற்றவும்) சேர்த்து நன்றாக கையால் பிடிக்கக்கூடிய பதம் வரும் வரை கட்டியில்லாமல் கிளறி பின் சூடு பொறுக்குமளவில் கைக்கொள்ளுமளவு எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்புகள்:
நடுத்தரமான அளவில் 25 உருண்டைகள் வரை செய்யலாம்.
இது வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை (லட்டு) ஆகும்.