நேந்திரம்பழம் பாயாசம்
தேவையான பொருட்கள்:
நேந்திரம்பழம் - 5 (பழுத்த பழம் பார்த்து வாங்கவும்)
சர்க்கரை (வெல்லம்) - 3/4 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
ஜவ்வரிசி - 100 கிராம்
அண்டி பருப்பு - 10 என்னம்
கிஸ்மிஸ்பழம் - 10 என்னம்
ஏலக்காய் - 3 (தட்டி வைக்கவும்)
நெய் - 100 கிராம்
செய்முறை:
நேந்திரம்பழத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய துண்டுகளை போட்டு வேக வைக்கவும். வெல்லத்தை பொடியாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு கையால் பிசைந்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும் (முதல் பால்), மீண்டும் 2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியில் ஒரு அடி அடித்து விட்டு வடிகட்டி பால் எடுத்து வைக்கவும் (இரண்டாவது பால்).
அடுப்பை சிம்மில் வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அதை கிளறிக் கொண்டே இருக்கவும். ஜவ்வரிசி வெந்து கலவை கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
நேந்திரம்பழம் நன்றாக வெந்ததும், தண்ணீர் வற்றி வரும் போது அதைக் கொஞ்சம் நெய்விட்டு, வெல்லம் சேர்த்து பிரட்டவும்.
நன்றாக வரண்டு வந்ததும் இரண்டாம் பால் ஊற்றி கிளறவும், ஒரு கொதி வந்ததும் முதல் பால் ஊற்றி, ஜவ்வரிசி கலவையையும் போட்டு நன்கு கைவிடமால் கிளறவும்.
நல்ல வாசனையோடு வரும் போது நெய்விட்டு கிளறவும். ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அதில் அண்டி பருப்பு, கிஸ்மிஸ்பழம், ஏலக்காய் பொடி பண்ணியதும் போட்டு வறுத்து பாயாசத்தில் போட்டு பரிமாறவும்.