திடீர் ரசமலாய்
தேவையான பொருட்கள்:
பால் (Half & Half) - 1 லிட்டர்
ரெடிமேட் ரசகுல்லா டின் - 1
சர்க்கரை - 1/4 கப்
பிஸ்தா - 10
ஏலக்காய் - 1 (விரும்பினால்)
செய்முறை:
ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும். பிஸ்தா பருப்பை மெல்லியதாக சீவி, அல்லது மிகச்சிறிய துண்டுகளாக உடைத்து/நறுக்கி வைக்கவும்.
முதலில் பாலை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
பால் சூடாகி கொதி வரும் நிலையில், சர்க்கரை, பொடித்து வைத்த ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும். சர்க்கரை கரைந்ததும், பிஸ்தா பருப்பை சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ரசகுல்லா டின்னை திறந்து, ரசகுல்லாவை ஒவ்வொன்றாக எடுத்து, லேசாக விரல்களால் அழுத்தி சர்க்கரை பாகை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் வைக்கவும். (அழுத்தும் போது மென்மையாக அழுத்த வேண்டும், இல்லையென்றால் உடைந்துவிட வாய்ப்புள்ளது).
பால் சிறிது நேரம் ஆறி, சற்றே இளஞ்சூடாக இருக்கும் போது, ரசகுல்லாக்களை கவனமாக ஒவ்வொன்றாக பாலில் போடவும்.
ஆறியபின், பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து பரிமாறவும்.