சோமாசி
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 1/2 கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 6
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவை பாத்திரத்தில் இட்டு தேவையான உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணியை நன்றாக பிழிந்து மாவின் மேல் மூடி விடவும்.
தேங்காயைத் துருவி ஈரப்பதம் போகும் அளவிற்கு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
வறுத்து ஆறின தேங்காய் துருவலில் பொடித்த பொட்டுக்கடலையையும், ஏலக்காயையும் கலந்து வைக்கவும்.
இந்த பூரணத்தில் தேவையான அளவு, முக்கால் அல்லது ஒரு கப், சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
மீதிச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் இட்டு சர்க்கரை அளவிற்கு அல்லது சற்று குறைவாக தண்ணீர் விட்டு கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மைதாமாவை சிறுசிறு உருண்டைகளாய் உருட்டி சப்பாத்தி குழவியால் பூரி வடிவத்திற்கு தேய்த்துக் கொள்ளவும்.
பூரியின் மேல்புறம் லேசாக எண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மீது 2 ஸ்பூன் பூரணத்தை வைத்து அரை வட்டமாக மடித்து, லேசாக தண்ணீர் தொட்டு ஓரங்களை மடித்து ஒட்டி விடவும்.
இந்த சோமாசிகளை எண்ணெய்யில் பொரித்து சர்க்கரை பாகில் போட்டு ஊறிய பின்பு எடுத்து ஆறவிடவும்.
தேவையெனில் உலர் திராட்சை, முந்திரிப்பருப்புகளை நெய்யில் வறுத்து பூரணத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்த சோமாசிகளின் மீது கலரில் நனைத்த தேங்காய் துருவல்களை தூவி அழகுபடுத்தலாம்.