சுருள் முறுக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 படி
பயத்தம் பருப்பு - 1/4 கப்
சீனி - 1/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 மூடி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மையப் பொடித்துக் கொள்ளவும்.
பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு, அரைத்து மாவுச் சல்லடையில் சலித்து வாணலியில் நன்றாக ஈரத்தன்மை போகும் அளவிற்கு வறுக்கவும். வறுத்த மாவினை மீண்டும் மாவுச் சல்லடையில் சலித்து, அதில் வரும் கட்டிகளை மீண்டும் அரைத்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பு மாவையும் சலித்துச் சேர்க்கவும்.
தேங்காய் துருவலில் பால் பிழிந்து முதல் பால் தனியாகவும், இரண்டாம் பால் தனியாகவும் எடுத்து வைக்கவும். முதல் தேங்காய் பாலுடன் சீனி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து லேசாக சூடுபடுத்தவும். (சீனி கரையும் அளவிற்கு வெதுவெதுப்பாக சூடானால் போதும்).
சலித்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு உப்பு, நெய் மற்றும் சீனி சேர்த்து கரைத்து வைத்திருக்கும் முதல் தேங்காய் பாலை ஊற்றி, தேவைக்கேற்ப இரண்டாம் தேங்காய் பாலையும் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.
சுருள் முறுக்குக் கட்டையில் எண்ணெய் தடவி, சிறிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து விரலால் நீளமாக தட்டவும்.
அதை மெல்ல எடுத்து விரலில் வைத்து இரண்டு முனைகளையும் இணைக்கவும். (சுற்றிய முறுக்குகளை அதிக நேரம் காற்றில் காயவிடாமல் பொரிக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
பத்து நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடலாம்.