சீனி அதிரசம்
தேவையான பொருட்கள்:
பச்ச அரிசி - 2 படி
சீனி - 1 1/4 கிலோ
ஏலக்காய் - 13
செய்முறை:
அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மெஷினில் கொடுத்து அரைத்து வாங்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு 1 1/2 கப் தண்ணீர் எடுத்து, சீனி மூழ்கும் அளவு ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
சீனி கரைந்ததும் இறக்கி வைத்து, அதில் பச்சரிசி மாவை சிறிது சிறிதாக தூவவும். அதனுடன் ஏலக்காய் பொடியையும் தூவவும். தூவிக் கொண்டே கரண்டியால் கிளறி விடவும்.
பிறகு எல்லா மாவையும் பாகில் போட்டு கட்டியில்லாமல் நன்கு கிளறி விடவும். மாவின் பதம் பாத்திரத்தில் ஒட்டாமல் கைக்கு மிருதுவாக இருக்கவேண்டும்.
மாவை நன்கு கிளறிய பிறகு அதே பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டை வைத்து மூடி 2 நாட்கள் புளிக்க விடவும்.
ஒரு இலையில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை வைத்து வட்டமாக தட்டவும். மிகவும் மெல்லியதாக இல்லாமல் சுற்றிலும் ஒரே சீராக தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய அதிரசத்தை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். மீண்டும் 2 நிமிடம் கழித்து திருப்பி போடவும்.
பின்னர் ஒரு நிமிடம் கழித்து அதிரசம் வெந்ததும் எண்ணெயை வடிகட்டி விட்டு எடுத்து விடவும். அதிகம் சிவக்க விடாமல் எடுத்து விடவும். ஒரே நேரத்தில் நிறைய அதிரசங்கள் போட கூடாது. முதல் அதிரசம் போட்டு அது பாதியளவு வெந்ததும் மற்றொரு அதிரசம் போடவும்.