சலங்கை பணியாரம்





தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - ஒரு கிலோ அல்லது 5 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 2 கப்
பொட்டுக்கடலை - 1 1/2 கப்
வெல்லம் - 1 கிலோ
எள் - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
பாசிப்பயறை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பயறை சுத்தமான தரையில் வைத்து அம்மி குழவியால் அதன் மேல் தேய்த்தால் தோல் தனியாக நீங்கிவிடும்.
பிறகு அதனை சுத்தமாகப் புடைத்து வைக்கவும். (ஒரு சிலவற்றில் தோல் நீங்காமலும் இருக்கும்).
புழுங்கல் அரிசியை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த புழுங்கல் அரிசியுடன் தோல் நீக்கிய பயறு, பொட்டுக்கடலை ஆகியவற்றை மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து சலித்து வைக்கவும். . (அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியில் அரைக்கலாம்).
வெல்லத்தை கரைத்து வடிகட்டி இளம் பாகாக காய்ச்சவும். (கம்பி பதமெல்லாம் தேவையில்லை. நன்கு கொதித்தால் போதும்).
மாவுடன் எள் மற்றும் வெல்லப்பாகு சேர்த்து கலந்து பிசைந்து, சீடை போல உருட்டிக் கொள்ளவும். (பிசைந்தவுடன் உருட்டவும். இல்லையெனில் மாவு பொலபொலவென்று உருட்ட முடியாமல் போய்விடும். அப்போது சிறிது பாகு கலந்து பிசைந்து கொள்ளலாம்).
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தோசை மாவு போல சற்று நீர்க்கக் கரைத்து, அதில் உருட்டி வைத்த உருண்டைகளை தோய்த்தெடுக்கவும்.
அதனை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
பச்சை பயறை தோல் நீக்க மிக்ஸியிலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம் . ஆனால், பொடியாகக் கூடாது.
தோல் நீக்கிய பயறு ஒரு படி (4 கப்), பொட்டுக்கடலை கால் படியைவிட சற்று அதிகம், புழுங்கல் அரிசி கால் படி. இது என் பாட்டி சொல்லி தந்த அளவு. (இதை நான் கப் அளவாக மாற்றியுள்ளேன்).
இந்த பணியாரத்தை சூடாக சாப்பிடுவதைவிட இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்.