கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை - 1/4 கிலோ
சீனி - 3/4 கிலோ
முந்திரி - 20
ஏலக்காய் - 4
பாதாம் - 10
நெய் - 200 கிராம்
கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
சம்பா கோதுமையை 5 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாதாமை 15 நிமிடம் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஊற வைத்த கோதுமையை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்தவற்றை பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். இதை போல் கோதுமை நிறம் மாறி சக்கையாகும் வரை 2 முறை அரைத்து பால் எடுத்து ஒரு மணி நேரம் தெளிய வைக்கவும்.
ஊற வைத்து தோல் உரித்த பாதாமை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு தெளிய வைத்திருக்கும் அரைத்த பாலை எடுத்து மேலே தேங்கி இருக்கும் தண்ணீரை மட்டும் மேலாக வடித்து எடுத்து விடவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி சீனியை போட்டு கரைய விடவும். லேசான கம்பி பதத்துடன் பிசுப் பிசுவென்றும், நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.
சீனி பாகானதும் அதனுடன் அரைத்து வடிகட்டிய மாவை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதன் பிறகு அதில் கலர் பவுடர் மற்றும் அரைத்த பாதமை போட்டு 15 நிமிடம் கிளறி விடவும்.
15 நிமிடம் கழித்து மேலே நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறி ஏலக்காய் பொடியை போட்டு மீண்டும் 10 நிமிடம் கிளறவும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வந்ததும் நன்கு ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விடவும்.
ஒடு தட்டில் முழுவதும் நெய் தடவி அதில் அல்வாவை கொட்டி நன்கு பரப்பி விட்டு வறுத்த முந்திரியை மேலே தூவி 15 நிமிடம் ஆற விடவும். ஆறியதும் கத்தியில் நெய் தடவிக் கொண்டு துண்டுகளாக போடவும்.