குழிப்பணியாரம் (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 அச்சு
சாதம் - ஒரு கைப்பிடி
மைதா - ஒரு கைப்பிடி
தேங்காய் - 4 துண்டு
ஏலக்காய் - 3
ஆப்பசோடா - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி சிறிது நீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி இலகுவாக கரைத்து வடிகட்டி வைக்கவும். சிறிய துண்டுகளாக தேங்காயை நறுக்கி சிறிது நெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு மிக்ஸியிலோ கிரைண்டரிலோ சாதம் உப்பு சேர்த்து தண்ணீருக்கு பதிலாக கரைத்த வெல்லத்தை ஊற்றி நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மைதா, வறுத்த தேங்காய், பொடித்த ஏலக்காய், ஆப்பசோடா, சேர்த்து இட்லிமாவு பதத்துக்கு கலக்கவும் (மாவு மிக கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கலாம்)
பணியார சட்டியை அடுப்பில் வைத்து குழிகளில் கால் பாகம் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றவும் தீயை சிறிதாக வைக்கவும்.
சீக்கிரம் இரண்டு மூன்று நிமிடத்துக்குள் வெந்துவிடும். வெந்ததும் திருப்பி விட்டு சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.