கருப்பட்டி பணியாரம் (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 படி
உருட்டு உளுந்து - 50 கிராம்
புழுங்கல் அரிசி - 3/4 படி
கருப்பட்டி - 1/2 கப்
வெந்தயம் - கைப்பிடி அளவு
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பருப்பு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு கிரைண்டரில் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு அரைத்து விட்டு மசிந்ததும், அரிசியை போட்டு தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தூள் செய்து போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். (கருப்பட்டி கரைந்தால் போதும்).
கருப்பட்டி கரைந்ததும் அதை மாவில் வடிக்கட்டி ஊற்றவும்.
அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை சுற்றிலுமாக ஊற்றி சட்டியை கையில் எடுத்து சுற்றிவிடவும். மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மூடிவைத்து வெந்ததும் எடுத்துவிடவும்.
சுவையான கருப்பட்டி ஆப்பம் தயார்.
பணியாரமாக செய்வதற்கு, பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
மேலே சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். பின்னர் 2 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.