இனிப்பு போளி (1)
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கோப்பை
கடலைப்பருப்பு - 1 1/2 கோப்பை
வெல்லம் - 1 கோப்பை
தேங்காய்ப்பூ - 1/2 கோப்பை
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
நெய் - 1/4 கோப்பை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
மைதாவில் உப்புத்தூள், மஞ்சள்தூளைப் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை சொட்ட வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைப்பருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காய்ப்பூவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.
பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் கட்டையால் தேய்க்கவும். இதேப்போல் எல்லா மாவையும் செய்து வைக்கவும்.
பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.