முருங்கைக்கீரை முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
முருங்கைக்கீரை - 4 கொத்து
பெரிய வெங்காயம் - பாதி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்கீரை உருவி தண்ணீரில் அலசி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போடவும். தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து கீரையுடன் சேர்த்து கிளறி தட்டை போட்டு மூடி விடவும். 3 நிமிடம் கழித்து திறந்து நன்கு கிளறி விடவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.
3 நிமிடம் கழித்ததும் முருங்கைக்கீரையுடன் முட்டையை ஊற்றி 4 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
முருங்கைக்கீரையுடன் முட்டை நன்கு ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து கீரையுடன் சேர்ப்பதால் உப்பு எல்லா இடத்திலும் சேரும்.