பொரித்த சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
நறுக்கின வெங்காயம் - 1 1/2 கப்
இஞ்சி, பூண்டு - 2 தேக்கரண்டி (பொடியாய் நறுக்கினது)
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலத்தூள் - 1 தேக்கராண்டி
பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் சிக்கனை சுத்தம் செய்து நடுத்தர அளவு எலும்பில்லாத துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லா துண்டுகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி அப்படியே 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு நறுக்கின இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து அம்மியில் வைத்து தட்டி எடுக்கவும். சட்னியாக அரைத்துவிடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறுமொறு என்று பொரித்துவிடக்கூடாது. சிக்கன் மிருதுவாக ஒரு 90 சதவீதம் வெந்திருக்கும்போதே எடுத்துவிட வேண்டும்.
உருளைக்கிழங்கை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு சிவக்கவிடாமல் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் வேறு எதையும் சேர்க்கக்கூடாது.
பொரித்த சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கை எண்ணெய் உறிஞ்சு பேப்பரில் போட்டு எண்ணெய் முழுவதையும் துடைத்து எடுத்திட வேண்டும்.
அடுத்து, பொரிக்க பயன்படுத்திய எண்ணெயில் சிறிது எடுத்து மற்றொரு வாணலியில் ஊற்றி காய விடவும். அதில் பிரிஞ்சி இலை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும். அதில் நறுக்கின வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு நசுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். தீயின் அளாவை குறைத்து வைத்து செய்யவும்.
பின்னர் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிடவும்.
அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5, 6 நிமிடங்கள் வேக விடவும்.
6 நிமிடங்களுக்கு பிறகு திறந்து நுணுக்கி வைத்துள்ள மிளகுத்தூளை தூவி, அடுப்பு தீயை குறைத்து வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி, மசாலா சிக்கனுடன் நன்றாக சேரும் வரை வேக விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை தெளித்துக் கொள்ளவும். அப்போதுதான் பாத்திரத்தின் அடியில் ஒட்டாது.
வெந்தவுடன் இறக்கி, பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை தூவி விட்டு பரிமாறவும்.