செட்டிநாட்டு உப்புக்கறி
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
பூண்டு - 20 பல்
இஞ்சி, பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 10
வர மிளகாய் – 10
மஞ்சள் பொடி – 1 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி – 3 மேசைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – மூன்று கொத்து
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கியும், பச்சை மிளகாயை தட்டியும் வைக்கவும்.
சோம்பை தட்டியும் வரமிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி விதை நீக்கியும் வைக்கவும்.
கறியை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, இஞ்சி, பூண்டு விழுது, தட்டிய பச்சை மிளகாய், இருநூறு மில்லி தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் முழுவதும் ஊற்றி சோம்பு, வரமிளகாய் தாளித்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து தக்காளித் துண்டங்களை சேர்த்து வதக்கவும். தக்காளி கரைந்து எல்லாம் சேர்ந்து எண்ணெய் மேலே பிரியும் போது கறிக் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். கறி நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.