சிக்கன் மற்றும் எக் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
முட்டை - ஒன்று
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 3/4 தேக்கரண்டி + ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வறுத்துக் கொள்ளவும். (அதிகமாக சிவக்க வறுக்கத் தேவையில்லை).
வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை சற்று பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும், இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி கிளறி வேகவிடவும்.
முட்டை அரை பதம் வெந்ததும் பொரித்த சிக்கன், தக்காளி, முக்கால் தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும். முட்டையுடன் அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.