சிக்கன் ஃப்ரை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் ட்ரம்ஸ்டிக் (கால்) - 10

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

ஊற வைக்க (மேரினேட் செய்ய) :

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

தனியா தூள் - 2 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கத்தியால் கோடுகள் போட்டு வைக்கவும். மேரினேட் செய்ய கொடுத்தவற்றை கலந்து வைக்கவும்.

இதில் சிக்கன் துண்டுகளை நன்றாக பிரட்டி 2 முதல் 4 மணி நேரம் வரை ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சிறிது வறுத்து எடுக்கவும். இதில் சிக்கன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.

எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே போல் வறுத்து எடுத்து தயாராக வைக்கவும்.

மீதம் உள்ள எண்ணெயை தேவைக்கு குறைத்து விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

இதில் மீதம் உள்ள மேரினேட் செய்த கலவை சேர்த்து வதக்கி, வறுத்து எடுத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி 5 நிமிடம் விட்டு எடுக்கவும்.

முன்பே வறுத்து எடுத்து வைத்திருக்கும் கறிவேப்பிலையை மேலே தூவி விடவும்.

குறிப்புகள்:

முதலில் கறிவேப்பிலை சேர்ப்பதால் எண்ணெயில் நல்ல வாசம் கொடுக்கும்.

இதே போல் நறுக்கிய எலும்பு உள்ள, அல்லது எலுமில்லாத சிக்கன் துண்டுகளையும் செய்யலாம்.

தனியா தூள் கட்டாயமில்லை. மிளகாய் தூள் மட்டுமே கூட போதுமானது.

இஞ்சி பூண்டு விழுது ஃப்ரஷாக அரைப்பதனால் அத்துடன் சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து அரைத்து மேரினெட் செய்ய பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு போதாது, அதனால் மேரினேட் செய்யும் கலவை செய்ய சிறிது நீரும் சேர்க்கவும்.

முழுமையாக எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. பாதி மூழ்க எண்ணெய் இருந்தாலே போதும். நன்றாக திருப்பி விட்டாலே சிக்கன் வெந்துவிடும்.