ஆட்டுக்குடல் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்குடல் - 3/4 கிலோ

சின்ன வெங்காயம் (அல்லது) பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 10

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய்ப்பூ - 1 கப்

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டுத் தேய்த்து ஓடும் நீரில் நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் ஆட்டுக்குடலுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்.

வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு குடலைத் தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த குடலைச் சேர்த்து, மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும்.

தீயின் அளவை அதிகரித்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, ட்ரையானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்கு சின்ன வெங்காயமும், தேங்காயும் தான் அதிக சுவை சேர்க்கும். இந்த வறுவலை மறுநாள் வைத்து உண்டால் அதிக ருசியாக இருக்கும்.

இதை மெத்தென்று சுட்ட தோசையினுள் வைத்து ரோல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.