முட்டை குழம்பு (9)
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
குழம்பு பொடி - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - 1/4 கப்
முருங்கைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொண்டு அதில் உருளைக்கிழங்குகளை இரண்டாக வெட்டிப் போடவும். அதிலேயே நறுக்கின முருங்கைக்காய் மற்றும் முட்டைகளைப் போட்டு வேக விடவும். சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு இறக்கி, முட்டையை ஓடு நீக்கி வைக்கவும். உருளையை மேலும் இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, அதில் குழம்பு மிளகாய்த்தூளைப் (மிளகாய், மல்லி, மஞ்சள் சேர்த்து அரைத்தப் பொடி) போட்டு கொதிக்க விடவும்.
அது நன்கு கொதித்து பொங்கி வரும்போது, ஓடு நீக்கி வைத்துள்ள அவித்த முட்டை, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதில் போடவும்.
சற்று கிளறிவிட்டு வேக விடவும். நன்கு கொதித்து குழம்பு சற்று சுண்டினாற்போல் வரவேண்டும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சோம்பு போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கின வெங்காயம், மற்றும் பூண்டு சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
வதக்கியவற்றைக் கொதிக்கும் குழம்பில் கொட்டி கிளறிவிடவும். அரைத்து வைத்துள்ள தேங்காயையும், உப்பையும் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
5 நிமிடங்கள் கழித்து குழம்பு கொதித்து அடங்கியதும் இறக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளை சிறிது கிள்ளிப் போட்டு பரிமாறவும்.