முட்டை குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 7 பல் + 5 பல்
இஞ்சி - ஒரு அங்குல துண்டு + 1/2 அங்குல துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/3 தேக்கரண்டி
கலந்த மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைத் தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், ஒரு அங்குல இஞ்சி துண்டு, 7 பூண்டு பற்கள், ஒரு தேக்கரண்டி சோம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முட்டையில் கலக்குவதற்கு, ஊற வைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் அரை அங்குல இஞ்சி துண்டுகள், 5 பல் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காயம், அரைத்த கடலைப்பருப்பு, அரைத்த பச்சைமிளகாய் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைகலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் நிறமாறியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலையை போட்டு ஒரு முறை நன்கு வதக்கி விடவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதில் 3/4 கப் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும்.
பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
மேலும் அதில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நான்கு நிமிடம் கொதிக்க விட்டு மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் பணியார சட்டியில் வேக வைத்து எடுத்த முட்டையை குழம்பில் போட்டு குறைந்த தீயில் இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கி பரிமாறவும்.