நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் (திருக்கை, வாளைமீன் தவிர) - 250 கிராம்
தேங்காய் துருவல் (அதிகம் வேண்டாம் என்பவர்கள் அரை கப்) - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4 அல்லது 5
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
மிளகு - 3/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 முதல் 1 1/2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
தனியா தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து தோலை நீக்கி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சின்ன வெங்காயம், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு புளிக்கரைசல், உப்பு சேர்த்து சுவைபார்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் (மண்சட்டியாக இருந்தால் சுவை கூடும்) மீனைப்போட்டு அதன் மீது மசாலா கரைசலை ஊற்றி கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் தனியே வைக்கவும். (இப்படி செய்வதால் உப்பு மற்றும் காரம் மீன் துண்டுகளின் உள்ளேயும் பிடிக்கும்)
இந்த மீன் கலவையை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே பாத்திரத்தை சுழற்றி விடவும். கரண்டி போட்டு கிளறினால் மீன் உடைந்து விடும்.
நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் மூடி போட்டு தீயைக்குறைத்து வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இக்குழம்பை நம் விருப்பத்திற்கேற்ப கெட்டியாகவோ அல்லது சிறிது நீர்த்தார் போலவோ செய்யலாம். அதற்கேற்ப காரம் மற்றும் புளியின் அளவை சேர்த்து செய்து கொள்ளவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
மீதம் வரும் குழம்பை அதே சட்டியில் வைத்து வற்றும் வரை சூடாக்கி அடுத்த நாள் பழைய சாதத்தில் உப்பு சேர்த்து தயிர் விட்டு பிசைந்து நடுவில் இக்குழம்பை வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.