கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 25
மொச்சை - 1 கப்
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
தூள் பச்சை வாசம் போனதும் வேக வைத்த மொச்சை, கருவாடு சேர்த்து மூடி கொதிக்க விடவும். கருவாடு நன்றாக வேக வேண்டும்.
கடைசியாக புளி கரைசல், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் அருமையான ஜோடி.
கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.