கணவாய் குழம்பு
தேவையான பொருட்கள்:
கணவா - 400 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கணவாவை சுத்தம் செய்து சிறிதாக வெட்டிக் கொள்ளவும், அல்லது ரவுண்டாக வெட்டி கொள்ளவும்.
பின்பு அதனுள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசைந்து நன்றாக அலசி கழுவவும்.
அதன் பிறகு தண்ணீரை வடித்து அதனுள் மஞ்சள், உப்பு, கறித்தூள் என்பவற்றை பிசைந்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரத் துண்டங்களாக வெட்டவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, வெந்தயம் என்பவற்றை போட்டு பிறகு வெங்காயத்தினையும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து கணவாவை, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பின்பு மெல்லிய தீயில் வைத்து 2 நிமிடங்கள் மூடி விடவும்.
அடுத்து உருளைக்கிழங்கை போட்டு கிளறி தண்ணீரை விட்டு 15 நிமிடங்கள் மூடி விடவும்.
கறி நன்றாக அவிந்து தடித்து வந்ததும் மூடியை திறந்து விடவும். பின்பு சூட்டோடு கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.