பருப்புப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - இரண்டு கோப்பை
சிறு பருப்பு - ஒரு கோப்பை
கடலைப்பருப்பு - கால் கோப்பை
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
நெய் - கால் கோப்பை
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் பத்துக் கோப்பை தண்ணீரை அளந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் முதலில் கடலைப்பருப்பை கழுவி போட்டு வேகவிடவும்.
பருப்பு பாதி வேக்காடாகும் பொழுது அரிசியையும் சிறுபருப்பையும் கழுவி போட்டு வேகவிடவும். அடுப்பின் அனலை மிதமாக எரிய விடவும்.
இதற்கிடையில் இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு சீரகத்தை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
பின்பு அரிசியும், பருப்புகளும் சேர்ந்து நன்கு வெந்தவுடன் இஞ்சி பச்சைமிளகாய் மற்றும் உப்பையும் போட்டு நன்கு கலக்கவும்.
பின்பு அடுப்பில் ஒரு சட்டியை வைத்து எண்ணெயும், நெய்யையும் கலந்து ஊற்றி காயவைக்கவும். பின்பு அதில் நசுக்கிய மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
அதை வெந்த பொங்கலின் மீது கொட்டி நறுக்கிய கொத்தமல்லியையும் தூவி நன்கு கலக்கி விட்டு இறக்கிவிடவும்.
குறிப்புகள்:
இந்த சுவையான பருப்பு பொங்கலை சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.