சர்க்கரைப் பொங்கல் (2)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லத் தூள் - 1 1/2 கப்
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 5
ஏலக்காய் - 3
தண்ணீர் - 1 1/4 லிட்டர்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சரிசி மற்றும் கடலைப்பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை களைந்து போடவும். அதனுடன் கடலைபருப்பை கழுவி தண்ணீரை வடித்து விட்டு போடவும். இரண்டையும் சேர்த்த பின்னர் 20 நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
அரிசி, கடலை பருப்பு இரண்டும் வெந்ததும் தூளாக்கிய வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அதில் தேங்காய் துருவல் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு சர்க்கரை பொங்கலில் வறுத்த முந்திரி மற்றும் பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து அதனுடன் டால்டாவை ஊற்றி கிளறி இறக்கவும்.