கோதுமை வெஜ் புலாவ்
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2 (அ) 3
ஏலக்காய் - 2 (அ) 3
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - கால் கப்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் தண்ணீரில் களைந்து வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் (எண்ணெயும் நெய்யும் கலந்தும் உபயோகிக்கலாம்) ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் தேங்காய் பாலுடன் தண்ணீர் கலந்து மொத்தம் ஒன்றரை கப் அளவிற்கு சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் களைந்து வைத்துள்ள கோதுமை ரவையைச் சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி கோதுமை ரவை வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கிளறவும். சிறுதீயில் மேலும் 3 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
குறிப்புகள்:
ஆனியன் ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.