கேழ்வரகு களி
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - நான்கு கோப்பை
புழுங்கலரிசி நொய் - ஒரு கைப்பிடி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
இந்த களி செய்வதற்கு சற்று குழிவான பாத்திரம் தேவை.
முதலில் ஆறுக்கோப்பை நீரை பாத்திரத்தில் அளந்து ஊற்றி உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
பிறகு அரிசி நொய்யை (பச்சையாக தூளாக்கிய அரிசி) நன்கு சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்.
நொய் நன்கு வெந்தவுடன் அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்து மாவை ஒரே நேரத்தில் கொட்டவும்.
கிளற வேண்டாம். இரண்டு நிமிடம் அப்படியே வேக வேண்டும். பிறகு ஒரு கரண்டியின் காம்பால், வெந்தும் வேகாமலும் இருக்கும் மாவை இலேசாக சுழற்றி கிளறவும்.
நன்கு கிளறி மாவு வெந்து கெட்டியான களியாக ஆனவுடன் குளிர்ந்த நீரைத் தெளித்து வேண்டிய அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
குறிப்புகள்:
இந்த கேழ்வரகு களியுடன் கத்திரிக்காய் கடைச்சலை பக்க உணவாக சேர்த்து சுவைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.