தேங்காய் பூ கேக்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 4 கப்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் - 1
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரைத் தேக்கரண்டி
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
திராட்சை - சிறிது
முந்திரி - சிறிது
செய்முறை:
பச்சரிசியை நன்கு ஊற வைத்து எடுத்து உலர்த்தி மாவாய் இடித்துக் கொள்ளவும்.
மாவினை சலித்து எடுத்து அதில் கிடைக்கும் குருணையில் சுமார் 4 கப் நீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
குருணைக் கொதித்து கூழ் போன்று வரும் சமயம் இறக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
ஆறியபிறகு அதனுடன் பச்சரிசி மாவு, நீரில் கரைத்த ஈஸ்ட், 4 தேக்கரண்டி சர்க்கரை, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக கட்டிகள் இல்லாமல் கைவைத்து பிசையவும்.
பிசைந்த மாவினை ஒரு உயரமான பாத்திரத்தில் போட்டு மூடி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் தேங்காயைத் துருவி லேசாக அரைத்து மாவுடன் சேர்ந்து பிசையவும்.
அத்துடன் சர்க்கரை, சிறிது முந்திரி, சிறிது திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும்.
பிறகு குக்கர் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதன் மீது முந்திரி, திராட்சையை சிறிது தூவி அதன் மேல் மாவினை ஊற்றவும்.
பாதி பாத்திரம் வரை மாவினை ஊற்றி மீண்டும் அதன் மீது முந்திரி, திராட்சையைத் தூவவும்.
ஒரு இட்லி பானையில் நீர் ஊற்றி, அதனுள் இந்த பாத்திரத்தை வைத்து மூடி சுமார் அரை மணி நேரம் வேகவிடவும்.
வெந்தவுடன் பாத்திரத்தை வெளியில் எடுத்து 15 நிமிடம் ஆற வைத்து ஒரு தட்டில் கவிழ்த்து அளவான சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.