தில்குஷ் கேக்
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - அரைக் கப் (100கிராம்)
பாசிப் பருப்பு - முக்கால் கப் (100கிராம்)
முந்திரிப் பருப்பு - 150 கிராம்
தேங்காய் துருவினது - முக்கால் அல்லது ஒரு கப்
நெய் - 300 கிராம்
சர்க்கரை - கீழே கொடுத்திருக்கும் அளவு
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கடலை பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் இளம் பொன்னிறமாக வறுக்கவும்.
அவற்றுடன், முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவினது சேர்த்து முடிந்த அளவு குறைந்த தண்ணீரில் மை போல அரைக்கவும்.
இந்த விழுதுக்கு இரண்டரை பங்கு சர்க்கரை எடுத்து, ஒரு கனமான பாத்திரத்தில், கம்பிப் பாகு வைக்கவும்.
உடனே அரைத்த விழுதை அத்துடன் சேர்த்து, நடுத்தரத் தீயில் கை விடாமல் கிளறவும்.
நெய்யை இளக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நடுவில் சேர்த்துக் கொண்டு வரவும்.
நல்ல பக்குவமாகிப் பூத்து வரும்போது, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
இறக்கின உடன் கை விடாமல் கிளறிக்கொண்டு இருந்தால் இறுக ஆரம்பிக்கும்.
அந்தப் பருவத்தில், நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு போடவும்.
குறிப்புகள்:
இது ஒரு அதி ருசியான கேக் - தேங்காய், முந்திரி, பாசிபருப்பு, கடலை பருப்பு முதலிய பொருட்கள் நெய்யுடனும், சர்க்கரையுடனும் சேர்ந்தால் ருசிக்குக் கேட்கவா வேண்டும்.