வெஜிடபுள் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
காய் கலவை - ஒரு பெரிய கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தயிர் - 3 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
முந்திரி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பால் - ஒன்றரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க
நெய் + எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய் கலவையுடன் தயிர், உப்பு, தூள் வகைகள் சேர்த்து பிரட்டி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
முந்திரியை ஊற வைத்து கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் முந்திரி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் காய் கலவை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிய விடவும்.
தேங்காய் பால் மற்றும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதி வந்ததும் சிறுதீயில் மூடி போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான வெஜிடபுள் பிரியாணி தயார்.