மட்டன் பிரியாணி (14)
தேவையான பொருட்கள்:
-----------------------------------------------------------
ஊற வைக்க:
---------------------------------------------------------
மட்டன் - அரை கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 மேசைக்கரண்டி
---------------------------------------------------------
வறுத்து பொடிக்க:
---------------------------------------------------------
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
மிளகு - 4
சோம்பு - ஒரு சிட்டிகை
சீரகம் - ஒரு சிட்டிகை
நட்சத்திர மொக்கு - சிறு துண்டு
ஜாதிக்காய் - கால் பாகம்
ஜாதிபத்திரி - கால் பாகம்
ஏலக்காய் - ஒன்று
கறிவேப்பிலை - 5 இலைகள்
---------------------------------------------------------
அரைக்க:
---------------------------------------------------------
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பற்கள்
புதினா - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – 2
---------------------------------------------------------
பிரியாணிக்கு:
---------------------------------------------------------
பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 2 கப்
தயிர் - 3 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் + தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை – பாதி
---------------------------------------------------------
தாளிக்க:
---------------------------------------------------------
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் + நெய் - 5 மேசைக்கரண்டி
செய்முறை:
மட்டனுடன் ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். மட்டன் ஊறியதும் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்த பிறகு மட்டனைத் தனியாகவும், அதிலிருக்கும் தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து வைக்கவும். அரிசி ஊற வைத்த தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவற்றை லேசான தீயில் வைத்து (தீய்ந்து விடாமல்) வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர, மற்ற பொருட்களை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
அத்துடன் வெங்காயத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
வதங்கியதும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த மட்டனைச் சேர்த்து, மசாலா நன்றாக மட்டனுடன் சேரும்படி சில நிமிடங்கள் பிரட்டிவிடவும்.
நன்கு பிரட்டிவிட்டு ஒரு கப் தேங்காய் பாலுடன், மட்டன் வேக வைத்தத் தண்ணீர் மற்றும் அரிசி ஊற வைத்த தண்ணீர் சேர்த்து, தேவையெனில் மேலும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். (சீரகச் சம்பா அரிசி என்றால் 1:2 என்ற அளவிலும், பாசுமதி அரிசி என்றால் 1:1 1/2 என்ற அளவிலும் சேர்த்தால் போதும்). கொதி வந்ததும் அரிசி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வேகவிடவும். சிறு தீயில் வைத்து பிரியாணி முக்கால் பதம் வெந்ததும் வறுத்து பொடித்த மசாலா தூவி மூடி தம்மில் போடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான மட்டன் பிரியாணி தயார்.
குறிப்புகள்:
பிரியாணிக்கு வதக்கும் போதே கரம் மசாலா பொடி சேர்ப்பதைவிட, கடைசியாகத் தூவுவது தான் நல்ல வாசம் தரும்.
எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது. அதனால் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
தேங்காய் பால் சேர்ப்பது உங்கள் விருப்பமே. தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம்.