பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

-----------------------------------------

பிரியாணிக்கு :

-----------------------------------------

அரிசி - 2 கப்

தண்ணீர் - 4 கப்

பட்டை - 2

கிராம்பு - 4

சோம்பு - அரை தேக்கரண்டி

முந்திரி - 3 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

-----------------------------------------

கோஃப்தாவிற்கு :

-----------------------------------------

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 (நடுத்தரமான அளவில்)

இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காய விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி (காரம் தேவையெனில்)

மல்லித் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

மல்லி, புதினா இலைகள் - சிறிது

செய்முறை:

பிரியாணிக்கு வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு முந்திரியைப் போட்டு லேசாக சிவக்கவிட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் லேசாக சிவந்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து, தண்ணீர் (ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில்) ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் உப்பு சரிபார்த்து, அரிசியைச் சேர்த்து 2 விசில் வர விட்டு இறக்கவும்.

கோஃப்தா தயாரிக்க மசித்த உருளைக்கிழங்குடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டவும்.

மீதிமுள்ள பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மல்லி மற்றும் புதினா இலைகளையும் நறுக்கி வைக்கவும். தயிருடன் மல்லித் தூள் மற்றும் சீரகத் தூளைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு போட்டு வதங்கியதும், மல்லி மற்றும் புதினா இலைகளைப் போட்டு, பொரித்த உருண்டைகளைப் போடவும்.

பிறகு தயிர் கலவையைச் சேர்த்து, கரண்டியால் பிரட்டாமல் லேசாகக் குலுக்கிவிடவும். அத்துடன் சாதத்தைச் சேர்த்து, சிம்மில் 2 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி தயார். மேலே பொரித்த வெங்காயத்தை வைத்து அலங்கரித்து, தயிருடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

உருண்டைகளை பொரிக்கும் முன்பு கரைத்த மைதாவில் பிரட்டி எடுத்தால் உருண்டைகள் உடையாமல் இருக்கும். சாதம் சேர்த்த பிறகு கரண்டியால் கிளறினால் கோஃப்தா உருண்டைகள் உடைந்துவிடும். அதனால் இரண்டு முறை பாத்திரத்தில் சாதத்தை மாற்றிக் கொட்டினால் அனைத்தும் ஒன்று போல கலந்துவிடும்.