சிக்கன் பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
சீரகச் சம்பா அரிசி - கால் கிலோ (அல்லது) 2 கப்
சிக்கன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2 (சுமாரான அளவில்)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பற்கள்
புதினா - ஒரு கைப்பிடி
தயிர் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் - 2 கப்
எண்ணெய் - அரை கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - சிறு துண்டு
புதினா - அரை கட்டு
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
ப்ரிஞ்சி இலை - ஒன்று
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். சிக்கனை நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை லேசாகக் கீறி வைக்கவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா மற்றும் தக்காளிச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும்.
அடிக்கடி கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அரிசியைச் சேர்க்கவும். அரிசியிலுள்ள நீர் வற்றும் வரைக் கிளறிவிடவும்.
பிறகு 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து மூடி வேக வைக்கவும். அரிசி பாதி வெந்ததும் உப்புச் சேர்த்து கலந்து மூடி வேக வைக்கவும். (குக்கராக இருந்தால் தண்ணீர், தேங்காய்ப பால், உப்பு சேர்த்து கலந்து 2 விசில் வரவிட்டு, சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லித் தழை, நெய் சேர்த்து கிளறிவிட்டு மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து திறக்கலாம்).
முக்கால் பதம் வெந்ததும் தோசைக்கல்லை பாத்திரத்தின் அடியில் வைத்து 10 நிமிடங்கள் தம்மில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து திறந்து நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் நெய் சேர்த்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு, மேலும் 5 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கவும். (விருப்பமுள்ளவர்கள் அரை மூடி எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம்). சுவையான, அரைத்து செய்யும் மசாலா மணத்துடன் சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
சிக்கன் கிரேவி மற்றும் தயிர் பச்சடியுட்ன் பரிமாற சுவை கூடும்.