ஆலு மட்டர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு கப்
பெரிய உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
பச்சைப் பட்டாணி - கால் கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
நெய்யில் வறுத்த முந்திரி
எண்ணெய், நெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னச் சின்ன சதுரங்களாக நறுக்கவும்.
புதினா, பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்துகொள்ளவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு, உருளைக்கிழங்கு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (உருளைக்கிழங்கு வெந்ததா என்று நசுக்கிப் பார்க்கவும்). இதனுடன் வேகவைத்த பச்சை பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி, உதிராக வடித்த சாதம் சேர்த்து மேலும் கிளறி பரிமாறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.