வாழைத்தண்டு புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - கால் அடி நீளத் துண்டு

சின்ன வெங்காயம் - 6 + 4

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் -3

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 இலை

வெல்லம் - சுண்டைக்காய் அளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டை தோல் சீவி, மெல்லிய வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து சிவக்க வறுத்து, அதனுடன் 6 வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய 4 வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வாழைத்தண்டை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கவும்.

வாழைத்தண்டு லேசாக வதங்கியதும், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.