வற்றல் மாங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் வற்றல் - 5 துண்டுகள்

சிறிய வெங்காயம் - 15

பூண்டு - 10

பெரிய தக்காளி - 1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

வெல்லம் - 1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நல்லெண்ணெய் - 60 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்துக் கொள்ளவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஐந்து நிமிடம் தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு தனியாக எடுத்து வைக்கவும். அதிலேயே ஐந்து பல் பூண்டு, மிளகாய்த்தூளை தவிர மற்ற மசாலாத்தூள்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியை கரைத்து அந்த தண்ணீரில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். மீதமுள்ள பூண்டு, வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தனியாக எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மாங்காய் வற்றலையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதில் கரைத்து வைத்திருக்கும் புளிமசாலா கரைசலை ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பை கொதிக்க விடவும்.

குழம்பின் மேல் எண்ணெய் மிதந்து கதகதவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்கு அப்பளம், ஏதேனும் பருப்பு கூட்டு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும்.

இந்த குழம்பை மழைக்காலங்களில் சமைத்து, மதியம் சூடான சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.