வத்தல் குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வற்றல் - 20 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றலைப் பொரித்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அப்படியே முழுதாக வைக்கவும்.
தக்காளி, பெரிய வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி, பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
புளியை ஊறவைத்து நானூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு, வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி பின் புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.