மிளகு குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சின்ன எலுமிச்சையளவு (அல்லது) 3 தேக்கரண்டி புளி பேஸ்ட்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 50 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் இரண்டையும் சிறு தீயில் வறுத்து எடுத்துகொண்டு பூண்டை வதக்கி எடுத்து கொள்ளவும். மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதங்கியவுடன் புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
அரைத்த கலவை, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, உப்பு ஆகியவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
எண்ணெய் தேவையென்றால் ஊற்றிக்கொள்ளலாம். கொதித்து எண்ணெய் மேலே மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.