பொரிச்ச குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயிறு அல்லது காராமணி - 1/2 கப்
கத்தரிக்காய் - 3
வாழைக்காய் - 1
வறுத்து அரைக்க:
வரமிளகாய் - 4
துருவிய தேங்காய் - அரை மூடி
கடலை பருப்பு - 1/4 கப்
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
முதலில் தட்டைப்பயிறை முதல் நாளே ஊறவைத்து சிறிது தண்ணீரும், உப்பும் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு குழையாமல் வேக வைத்து எடுக்கவும்.
கத்தரிக்காய், வாழைக்காயை நறுக்கி அதிலும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியே வேக வைத்துக் கொள்ளவும்
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை வேகவைத்த பயிறு, கத்தரிக்காய் வாழைக்காயுடன் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனைக் கொதிக்க வைத்து, தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
பருப்பும், அரைத்த விழுதும் இருப்பதால் குழம்பு நன்கு கெட்டியாகும். இது கொஞ்சம் கெட்டியாக பரிமாறும் குழம்பு தான்.
பின்பு தாளிக்கக் கொடுத்துள்ள கடுகு, கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளித்து மேலே கெட்டியான குழம்பில் சேர்த்து பரிமாறவும்.