புடலங்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 4 பல்

தக்காளிப்பழம் - 1

புளி - ஒரு எலுமிச்சை அளவு

பால் - 1 கப்

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு நெட்டு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு புடலங்காயைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

அதில் புளிக்கரைசலை ஊற்றி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போனதும் பாலை விடவும்.

ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்த புடலங்காயைப் போடவும்.

குழம்பு தடிப்பாக வந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சோறு, புட்டு, இடியப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.