தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை தட்டக்காய் - 1/4 கிலோ
சிறிய சுரைக்காய் - 1
தக்காளி - 1
புளி - 50 கிராம்
வெல்லம் - ஒரு கோலி அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை மூடி
கறிவேப்பிலை - 10
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 6
செய்முறை:
சுரைக்காயைப் பொடியாகவும், தாளிக்கக் கொடுத்துள்ள வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும்.
தட்டக்காயை உரித்துவிட்டு வேக வைக்கவும். (வேக வைத்தும் உரிக்கலாம்).
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டுப் பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து காய்கள் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
காய்கள் நன்கு வதங்கியதும் வேக வைத்த தட்டக்காய் சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கொதிக்கவிட்டு குழம்பு திக்கானதும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கவும். இந்தக் குழம்பு வைத்த அன்றைய நாளைவிட அடுத்த நாள் இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்.