தக்காளி பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - ஒரு கையளவு
பழுத்த தக்காளி - 2
சாம்பார் வெங்காயம் - 6
பூண்டு - 4 பற்கள்
காய்ந்த மிளகாய் - 6
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி - அரை நெல்லிக்காயளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் பூண்டை உரித்து வைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாயைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதை தொடர்ந்து வெங்காயம், பூண்டு, புளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு வதக்கியதை ஊறிய துவரம் பருப்பில் கலந்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த விழுதை குழம்பு கூட்டும் பாத்திரத்தில் போட்டு கரைத்த தக்காளியை சேர்த்து கலக்கவும்.
பிறகு அதில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு இரண்டு கோப்பை நீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து தெளிந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி விட்டு பரிமாறலாம்.
அல்லது இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து கொட்டியும் பரிமாறவும்.