கத்திரிக்காய் புளிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 5 பத்தை
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும். தேங்காய் பத்தைகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய்களின் காம்பினை நீக்கி விட்டு, பின்புறத்தை நான்காக கீறவும். (முழுவதுமாக காயை நறுக்காமல், முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும்)
எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும். காயை வதக்கும் போது தீயை சிறிதாக வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும்.
காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.