கத்திரிக்காய் பனீர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1/2 லிட்டர்

தயிர் - 1/2 கப்

புளி - ஒரு எலுமிச்சை பழ அளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

கத்திரிக்காய் - 4

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

வடகம் அல்லது கடுகு - 1 தேக்கரண்டி

பூண்டு - 8 பல்

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

பாலில் தயிரை சேர்த்து கொதிக்க விடவும்.

பால் திரிந்து தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகரண்டியில் துணியை போட்டு வடிகட்டவும். இதை அழுத்தமாக கட்டி தண்ணீர் இறங்கும் வரை வைக்கவும்.

பிறகு கட்டி வைத்துள்ள பனீரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வடிந்த நீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். (மஞ்சள் நிறத்தில் கிடைத்துள்ள இந்த நீர் தான் குழம்பிற்கு சுவையை கொடுக்கும்.)

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து வடகம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

கத்திரிக்காய் வதங்கியதும் புளிக்கரைச்சலை சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு பனீரை சேர்க்கவும். பனீர் குழம்பில் ஊறியதும் பரிமாறலாம்.

குறிப்புகள்:

பனீர் குழம்பில் ஊற ஊற சுவை கூடுதலாக இருக்கும்.