வாழைப்பூ கீரைப் பொரியல்
தேவையான பொருட்கள்:
சிறிய வாழைப்பூ - 1
எதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
நரம்பு நீக்கிய வாழைப்பூ இதழ்களை மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றி துருவல் போல் ஆனதும் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
வெடித்து அடங்கியதும் நறுக்கின சின்ன வெங்காயம், கீறின பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அவை வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு கிளறிவிடவும்.
ஐந்து நிமிடம் நன்றாக கிளறி விட்ட பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்க்கவும்.
மேலும் ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த பருப்பை போட்டு மூன்று நிமிடம் கிளறி பின்னர் இறக்கவும்.
விருப்பமுள்ளவர்கள் இறக்குவதற்கு சற்று முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.