முருங்கைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 10
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - பாதி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
முருங்கைக்காய்களை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை துருவி எடுக்கவும்.
தேங்காயுடன் சீரகம், சோம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கெட்டியாக அரைக்காமல் சற்று நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு, தாளிக்க எண்ணெய் எடுத்து தனியே வைக்கவும்.
சற்று பெரிய வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி (காய்கள் மூழ்கும் அளவிற்கு), அதில் நறுக்கிய முருங்கைக்காய் துண்டங்களைப் போட்டு உப்பு சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயத்தை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பின்னர் அதில் வேகவைத்து எடுத்த முருங்கைகாய் துண்டங்களைப் போட்டு வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கி விட்டு, அதில் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் நன்கு கிளறி வேகவிடவும்.
சுமார் 5 நிமிடங்கள் வெந்ததும் இறக்கிவிடவும். வேகும் போது அவ்வப்போது கிளறி விடவும். அப்போதுதான் அனைத்து துண்டங்களிலும் மசாலா இறங்கும்.