ராகி வெஜிடபிள் தோசை
தேவையான பொருட்கள்:
ராகிமாவு - ஒரு கப்
மைதாமாவு - ஒரு கப்
பச்சரிசிமாவு - 1/2 கப்
ராகிசேமியா - 1/2 கப்
வெங்காயம் (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
தக்காளி (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பச்சைமிளகாய் (மிகப்பொடிப்பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
கேரட் (துருவியது) - 1/2 கப்
காலிஃப்ளவர் (துருவியது) - 1/2 கப்
இஞ்சி (துருவியது) - 1/4 கப்
வெங்காயத்தாள் (பொடிப்பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
கொத்தமல்லித்தழை (பொடிப்பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், அதில் 2 சிட்டிகை உப்பு கலந்து அதில் ராகி சேமியாவை போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ளது போல் காய்கள் அனைத்தையும் துருவ வேண்டியவற்றை துருவவும் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு அதில் சீரகம், கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும், அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய், கேரட், காலிஃப்ளவர், இஞ்சி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
கடைசியில் தக்காளி போட்டு வதக்கி பின் வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாத்தூள் போட்டு வதக்கவும், பின்னர் காய்களுக்கு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஊறவைத்த சேமியாவை எடுத்து தண்ணீரை வடிகட்டவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் ராகிமாவு, மைதாமாவு, பச்சரிசிமாவு இவற்றை தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கலக்கவும்.
பின்னர் வடிகட்டிய ராகி சேமியாவையும், காய்கலவையை கலந்து தோசைமாவு பதத்திற்கு கலந்துக்கொள்ளவும். கடைசியில் உப்பு சரிப்பார்த்து தேவை என்றால் போட்டுக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் போட்டு நன்றாக சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை வார்க்கவும், எண்ணெயை தோசையை சுற்றி விட்டு அல்லது நெய் விட்டும் சுடலாம்.
தோசை நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவை மற்றும் மணமான ராகி வெஜிடபிள் தோசை தயார்.