முட்டை கீமா தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு
கொத்துக்கறி (கோழி அல்லது மட்டன்) - 200 கிராம்
முட்டை - 3
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
பச்சைமிளகாய் - 2
தேங்காய்ப்பூ - அரை கப்
சோம்பு, சீரகம் (தாளிக்க) - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 100 மி.லி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வர மிளகாய் - 6
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒன்று (பூண்டு பல் அளவு)
தேங்காய் - ஒரு சில்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை மையாக அரைக்கவும். கொத்துக்கறியை கழுவி பிழிந்து ஒரு கடாயில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, அரைத்த மசாலா ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சிறு தீயில் மூடி வேக விடவும்.
தண்ணீர் வற்றி வெந்தவுடன் வேறு கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய மீதி வெங்காயம் போட்டு வதக்கி வெந்த கீமாவை கொட்டி சுருள கிளறி தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும்.
முட்டையை ஒவ்வொன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு நுரைக்க அடித்து கொள்ளவும்.
தோசையை ஊற்றி லேசாக வெந்ததும் சிறு தீயில் முட்டையை ஊற்றி எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு வெந்ததும் அதன் மேல் கீமாவை வைத்து மடித்து எடுத்து விடவும்.