சோள பணியாரம்
தேவையான பொருட்கள்:
சோளம் - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 4 - 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
வழக்கமாக இட்லிக்கு அரைப்பது போல உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த உளுந்து மாவுடன் சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 - 10 மணி நேரம் வரை புளிக்கவிடவும்.
மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.
பணியாரம் செய்வதற்கு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் இட்லி சோடா சேர்க்கலாம்).
பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் துளி எண்ணெய் விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான சத்தான சோள பணியாரம் தயார்.
குறிப்புகள்:
காரச் சட்னி, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.