கேழ்வரகு இனிப்பு அடை (3)
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 1/2 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப் + 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை கட்டியில்லாமல் பொடி செய்து கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவை சலித்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, வெல்லம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலந்த மாவில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். தேவைப்பட்டால் மேலும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை எடுத்து சற்று பெரிய எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை வைத்து விரல்களால் அழுத்தி வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி கல் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் அடையை இலையுடன் திருப்பி போட்டு, மேல் இருக்கும் இலையை கிழிந்து விடாமல் ஜாக்கிரதையாக எடுத்து விடவும். பிறகு அடையின் மேலே சிறிது எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் ஊற்றியதும் அடுப்பின் தீயை குறைத்து வைத்து செய்யவும். 3 நிமிடம் வேக வைக்கவும். பிறகு திருப்பி போட்டு மீண்டும் 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.