முள்ளங்கி முருங்கை சாம்பார்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1/4 கிலோ
முருங்கைக்காய் - 2
துவரம் பருப்பு - 1 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை இலேசாக கழுவி சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்த்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை நன்கு கழுவி வட்டமாகவோ, அரைவட்டமாகவோ நறுக்கி வெறும் சட்டியில் போட்டு நன்கு வதக்கி வைக்கவும்.
முருங்கைக்காயை வேண்டிய அளவுக்கு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தில் ஒரு மேசைக்கரண்டி பொடியாக தாளிப்பதற்கும், மீதியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
புளியை நன்கு நீர்க்க கரைத்து கொள்ளவும்.
குழம்பை கூட்டும் சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
தொடர்ந்து மிளகாய்தூள், தனியாத்தூளைப் போட்டு வதக்கி உப்பில் பாதியைப் போட்டு புளிக்கரைசலை ஊற்றி நன்கு கலக்கவும்.
அதில் முருங்கைக்காயை முதலில் போட்டு வேகவைக்கவும். காய் நன்கு வெந்தவுடன் முள்ளங்கியைப் போட்டு வெந்த பருப்பையும், மீதியுள்ள உப்புத்தூளைக் கொட்டி, கொத்தமல்லியை போட்டு ஒரு கோப்பை தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து குழம்பு பதம் வந்தவுடன் ஒரு சிறிய சட்டியில் மீதியுள்ள எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து குழம்பின் மீது கொட்டி சூடாக பரிமாறவும்.